மழைக்காவியம் பாடிய மருதமுனை சின்னாலிமப்பா

1995 இல் வெளிவந்த மழைக்காவியம் புத்தக அட்டைப்படம்

இப்றாலெப்பை ஆலிம் என்ற ஒரு இந்தியர் மருதமுனைக்கு வந்து தங்கிவாழ்ந் திருந்தார். அவருக்கு மீராலெவ்வை என்ற ஒரு மகன் பிறந்தார். தன்னைப்போல் தன் மகனையும் ஒரு ஆலிம் ஆக்க எண்ணிய அவர் தென்னிந்தியாவில் காயல்பட்டினம் எனும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். மீராலெவ்வை மார்க்க கல்வி பயிலும் காலத்தில் தனது மாணவர்களான சேசகு அப்துல் காதர் நெய்னா லெப்பை”, “மஸ்ஹான் ஸாஹிப்” என்பவர்களுடன் தமிழையும் மிக சிறந்த முறையில் கற்றுத் தேர்ந்தார். கல்வியை முடித்து ஊருக்கு வந்த மீராலெவ்வை ஆலிம் தனது ஜீவனோ பாயத்திற்காக வேளாண்மைச் செய்கையிலீடுபட்டார். 


ஊருக்கு மேற்கே பத்து மைல் தூரத்திற்கப்பாலுள்ள களிமடுக் கண்டத்தில் வேளாண்மைச் செய்கையை ஆரம்பித்தார். அக்கண்டத்தைச் சேர்ந்த களிமடு, வத்தகாமம், பதலவெளி, கேணிமடு என்ற வட்டைகள் எல்லாம், மருதமுனையாருக்கு சொந்தமாயின. களிமடுவில் “ஆலிமின் பிட்டி ” என்ற இடம் அக்கண்டத்திற்கு மையமாக அமைந்தது. மீராலெவ்வை ஆலிம் அப்பிட்டியில் தான் தனது இருக்கையை அமைத்துக் கொண்டார். அப்பிட்டியில் வருடந்தோறும் விளைவில் கந்தூரி கொடுக்கும் வழக்கமிருந்து வந்தது.


களிமடுக் கண்டம் மாரியை அடுத்த பெரும் போகச் செய்கைக்குரியது. ஒரு முறை மாரி குறைந்ததனால் பயிர்கள் வாடத் தொடங்கின. மக்கள் பயிருக்கு நீரில்லாமல் அங்கலாய்த்தனர். அப்பொழுது ஆலிம் கிலேசமுற்று தனது பாண்டித்தியத்தினால் ”மழைக்காவியம்” என்ற ஒரு கவியை ஆக்கி வயலுக்குள் இருந்து பாடினார். அவரின் இறைஞ்சுதலை ஏற்றுக்கொண்டு மழையை வருஷிக்கச் செய்து மக்களினது தேவையை நிறைவேற்றினான். அன்று தொடக்கம் பெரிய ஆலிமின் மகனான மீராலெவ்வை ஆலிமை சின்ன ஆலிம் அப்பா என அழைக்கத் தொடங்கினர்.


அவரின் அனுசரணையோடு மருதமுனையார் பலர் காணிக்காரர் ஆயினர். அக்கண்டம் மருதமுனையாருக்கு சொந்தமான ஒரு பிரதேசமாக அமைந்தது. அவரின் மழைக்காவியத்தைப் பலர் பாட நான் கேட்டிருக்கின்றேன். அச்சு இல்லாத அக்காலத்தில் எழுதப்பட்ட கையெழுத்து ஏட்டுப் பிரதி தப்பும் தவறுமாக இருந்ததை ஜனாப். M. S. M. இப்றாம் அச்சுப் பதித்தார். அதுவே இன்று மழைக்காவியம் என்று மக் களுக்குத் தெரியும். நான் அதனைப் பாங்கு செய்து கொடுத்தேன்


துறவறத்தை மேற்கொண்டிருந்த சக மாணவரான மஸ்தான் ஸாஹிப், கவிதைகள் பல இயற்றியிருப்பதை அறிந்தார். அவரது சுவிதைகளில் ஷரீஅத்-இற்கு மாற்றமான சில கருத்துக்கள் இருந்ததை அறிந்தார். அதற்கு மறுப்பாக “ஞானரை வென்றான்” எனும் நூலை ஆலிம் அப்பா இயற்றினார். இதுவும் என்னால் செப்பம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.


மருதமுனை வடதெரு பள்ளிவாசலில் ஆரம்ப நிரந்தரக்கட்டிடம் உருவாகின்ற பொழுது எனது பாட்டனாராகிய ஆலிம் அப்பா தனது வேளாண்மை செய்கையைக் கைவிட்டு, திருகோண மலையைச் சேர்ந்த வெள்ளைமணல் எனும் இடத்திற்கு குடி பெயர்ந்தார். அவரின் அடக்கஸ்தலம் இன்னும் ஒரு புனித இடமாக கணிக்கப்படுகின்றது. 1926ம் ஆண்டில் திருகோணமலைக்கு புகையிரதப் பாதை திறந்த பொழுது அவரின் அடக்கஸ்தலத்தை மருவி அப்பாதையை அமைத்தனர். வேலையை ஆரம்பித்து, வேலைக் கோச்சு சென்ற போது அவரின் அடக்கஸ்தலத்தை தாண்டிச் செல்லாது நின்று விட்டது. இயந்திரக் கோளாறு என்று வல்லுனர்களால் பரிசோதிக்கப்பட்டபோது அப்படி ஒன்றும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. 


மக்கள் “இங்கே ஆலிம் அப்பாவின் அடக்கஸ்தலம் இருக்கிறது. பாதையை திசை திருப்பினால் தான் கோச்சி ஓடும்” என்றனர். அதன்படி பாதையை சுற்றி விலக்கி வளைத்து எடுத்த போது கோச்சு ஒடியது. அவ்வளைவை இப்போதும் காணலாம் அடக்கஸ்தலம் திருகோணமலைக்கு செல்லும் பாதையினருகே அமைந்துள்ளது. ஆலிம் அப்பாவின் பிற்சந்ததியினர் சிலர் இன்னும் மருதமுனையில் வாழ்ந்து வருகின்றனர்.


புலவர் மணி

அல்-ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன்.

இதனை சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *