எங்கள் கிராமம் மருதமுனை

புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன்

(21-08-1972 இலங்கை வானொலியில் ஒலிபரப் பப்பட்டது.)

 

ஆங்கிலேயர் இலங்கையின் சிங்கள நாட்டைக் கைப்பற்ற முயன்ற சமயத்தில் அவர்களையும் சிங்கள மக்களுடன் சேர்ந்து எதிர்த்ததனால் சிறைப் பிடிக்கப்பட்ட முஸ்லிம் தேச பக்தர் எழுவருள் ஒருவரான அனுஸ்லெவ்வை என்பவர் பிறந்த மருதமுனையே எம்மூர்.

 

இது கிழக்கிலங்கையில் கல்முனைப் பட்டினத்துக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்திலுள்ளது. அரைச் சதுர மைல் விஸ்தீரணமுள்ள சுமார் பத்தாயிரம் மக்களைக் கொண்டுள்ள எம்மூர். இரு தெருக்களாகவும், தெருவுக்கொரு ஜூம்ஆப் பள்ளி வாசலைக் கொண்டுள்ளதாகவுமிருக்கிறது. ஆரம்ப காலத்தில் பருத்தி பயிரிட்டுப் பஞ்செடுத்து நூல் நூற்றுத் துணி நெசவு செய்த பெருமைக் குரியது எம்மூர். அதற்காக அன்று உபயோகித்த உபகரணங்கள் பலவற்றை உபயோகமற்ற நிலையில் இன்றும் காண முடிகிறது. பஞ்சு வேறு பருப்பு வேறாக்க உபயோகித்த மர இயந்திரம் ஒன்று “பருத்திமனை” என்ற பெயரில் இன்றும் இருக்கிறது. இன்று பருத்தியரைக்க அது உபயோகிக்கப்படுவதில்லையாயினும் பாயிழைக்கும் பன் புல்லை நெரித்துத் தட்டையாக்க உபயோகிக் வி கப்படுகிறது. பருத்திமனை, வில், கதிர், சறுக்கால், திருவிடம். நிலையடி, சூத்திரம் முதலான உபகரணங்கள் நெசவுத் தொழிலில் அவர்களால் உபயோகிக்கப்பட்டவையாம். அன்று குழித் தறியில் கையால் நெசவு செய்தனர். தற்போது இறக்குமதி செய்யப்பட்ட நூல் கிடைப்பதனாலும் இயந்திரத் தறி வழக்கில் வந்தமையாலும் பழைய முறையைக் கைவிட்டுத் திருந்திய முறையில் இலகுவாகவும், விரைவாகவும் நெசவு செய்ய ஆரம்பித்து விட்டனர். 90 சதவீதமான வீடுகளில் இன்று நெசவுத்தொழில் நிகழ்கிறது.

 

உயர்தரக் கல்வி கற்கச் செல்பவர்களைத் தவிர்த்து ஏனைய ஆண்களும், பெண்களும் நெசவுத் தொழிலில் ஈடுபடுகின்றனர். நெசவுத் தொழில் மூலம் நாளொன்றுக்குக் குறைந்தது ஐந்து ரூபாவேனும் சம்பாதிக்கத் தெரிந்திருக் கின்றனர். பலதரப்பட்ட சீலையினங்களும் இங்கு உற்பத்தியாகின்றன. செயற்கைப் பட்டுத் துணிகளும் சித்திர வேலைப்பாடுகளுடன் செய்யப்படுகின்றன.

 

பண்டைக் காலத்தில் இங்கு நெசவு செய்த சீலை வகைகள், உப்பு, கருவாடு, தேங்காய். புகையிலை முதலிய பொருட்களை கூட்டங்கூட்டமாக பன்னூற்றுக் கணக்கான எருத்து மாடுகளில் பொதிகளிலேற்றிக் கொண்டு மேற்குப்புறமாக இருந்த காடுகளினூடே ஒற்றடிப் பாதை வழியே ஓட்டிச் சென்று சிறுசிறு கிராமங்களில் வசித்த சிங்கள மக்களுக்குக் கொடுத்து அவர்கள் விளைவித்த தவச தானியங்களைப் பெற்று பண்டமாற்றுச் செய்து வந்தனர். இதற்குத் “தாவளமேற்றுதல்” என்று பெயர். ஒருவருக்கு நூற்றுக் கணக்கான எருத்து மாடுகளிருக்கும். மாட்டின் முதுகில் இரு புறமும் தொங்கவிடப்பட்ட பொதிகளில் சாமான் களை நிறைத்து ஏற்றிக்கொண்டு நடத்திச் செல்வர். பண்ணை, கோணியல், காவாளை பின்தட்டு, மணி சகடை என்பன தாவளத்தில் உபயோகிக் கப்பட்ட உபகரணங்களாகும். 

 

தாவளமேற்றிச் சென்று சிங்கள மக்களுடன் தொடர்புகொண்டு சிங்கள மொழி பேசத்தெரிந்து கொண்ட அவர்கள் சிங்கள மொழி வழக்கு ஒன்றைத் தமது தாய் மொழியாம் தமிழ்மொழியிலும் சேர்த்துக் கொண்டனர். சிங்கள மொழியில் வினாக்கள் எல்லாம் ஹொந்தத? சனிப்பத ? என ஈறு அகரத்தில் முடிவதுபோல தாமும் வந்தத?, நல்லத? என வினா வீற்றை அகரமாக முடித்துப் பேசத் தொடங்கினார். இது காலாந்தரத்தில் கிராம மக்கள் எல்லார் வாயிலும் பயில வந்து விட்டது. இன்றும் இவ்வூர் மக்கள் வினாக்களைத் தம்மிடையே அகரத் திலேயே முடித்துப் பேசுவர்.

 

தாவளமேற்றிச் சென்று பதுளைப் பாலாத்தையிலுள்ள சிங்கள மக்களோடு இவ்வூர் மக்களிற் பலர் அன்னியோன்யமாகப் பழகி வந்தனர். தவச தானியங்களைச் சேகரிக்கும் வரை அங்கு தங்கினர். சிலர் கடைகளை வைத்து நிலையாக வியாபாரமும் செய்தனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் தான் நாம் முன்பு கூறிய தேசபக்தர் அனஸ் லெவ்வையை ஆங்கிலேயர் சிங்கள மக்களுடன் சேர்த்துச் சிறைப்பிடித்தனர் எனலாம்.

 

இவ்வூர் மக்களுக்கு உள்நாட்டுச் சிங்கள் வரோடு மட்டமன்றிக் காலிப்பகுதிக் கரை நாட்டுச் சிங்களவரோடும் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. காலியிலிருந்து கடலில் கரைவலை போட்டு மீன்பிடிக்க என வந்த சிங்களவர் சிலர் கல்முனையில் வந்து தங்கினர். வலைபோட்டு மீன்பிடிக்கும் தொழிலில் இவ்வூர் மக்களும் அவர்களுடன் தொடர்புகொண்டு தாமும் கடலில் கரைவலை மூலம் மீன்பிடிக்கத் தொடங்கினர். இந்தத் தொழிலை ஒரு தொகுதி மக்கள் இன்றும் செய்து வருகின்றனர்.

 

இவ்வூர் மக்களுக்கு விளைநிலம் சொற்ப மாகவே சொந்தமாக உள்ளது. அதனால் குறைந்த தொகையினரே விவசாயிகளாவிருக்கின்றனர். கல்லோய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் இவ்வூர் மக்களுக்கும் ஒரு பகுதி நிலம் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றப்பட்டுள்ளது

 

கைத்தொழில் செய்யத் தெரியாத ஒரு பெண்ணேனும் இவ்வூரிலில்லை. தெரியாதவள் மற்றவர்களால் பழிக்கப்படுவாள். பாயிழைப்பார்கள். நூல் சுற்றுவார்கள். நெசவு செய்வார்கள். மருதமுனை பாயிழைத்தலில் பண்டுதொட்டுப் பிரபல்யமடைந்த ஒரு கிராமம். பாடசாலைப் படிப்பை முடித்துக் கொண்டு வீட்டில் வதியும் ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரத்தைத் தானே தேடிக் கொள்ளத் தெரிந்திருக்கிறாள். பெண்களுக்கு வீட்டில் வேலையிருப்பதனால் ஆண்களுக்குக் கோட்டில் அதிகம் வேலையிருப்பதில்லை. மருதமுனை மக்கள் சமாதானப் பிரியர். அதனால் மருதமுனை வழக்குகள் கோட்டில் அதிகமிருப்ப தில்லை. குவாஸிக்கோடு மாதத்தில் ஒருநாள் கூடும்.

 

ஒரு மகாவித்தியாலயமும் ஐந்து ஆரம்பப் பாடசாலைகளும் இவ்வூரிலுண்டு. இங்கு கற்பிக்கும் எல்லா ஆசிரியர்களுமே இவ்வூர் வாசிகள் தான். கிழக்கிலங்கையில் உயர்தரக் கல்விக்கு வித்திட்ட ஒரு முஸ்லிம் கிராமம் மருதமுனை என்று சொல்வதில் பெருமைப்படு கின்றேன். இனிய தமிழ்மொழியை ஆண்கள் வாயிலிருந்து மட்டுமன்றிப் பெண்கள் வாயிலிருந்தும் கேட்கக்கூடிய ஒரு முஸ்லிம் கிராமம் மருதமுனை என்று மகிழ்ச்சியுடன் கூறுவேன்.

 

நாட்டுக் கவிகள் இயற்றிப் பாடும் நங்கையர் பண்டு தொட்டு இவ்வூரிலிருந்து வருகின்றனர். இலக்கிய இலக்கணங்கள் கற்காமலே இயல்பாகவே கவிதையியற்றும் ஆற்றல் பெற்ற பலர் இவ்வூரில் தோன்றி மழைக்காவியம், ஊஞ்சற்பாட்டு. பொல்லடிப் பாட்டு, வழிநடைச் சிந்து, ஒப்பாரி முதலிய கவிதைகளைப் பாடிச் சென்றிருக்கின்றனர். அவர்களுள் தலைசிறந்தவதான இல்லற ஞானி சின்ன ஆலிம் அப்பா என்றழைக்கப்பட்ட மீராலெப்பை ஆலிம் ஞானரை வென்றான் என்னும் கவிதை நூலை 63 விருத்தப்பாக்களில் போலி ஞானிகளுக்கு வாயாகப் பாடினார்.

 

திருகோணமலைச் சீனன் வாடியில் அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் அவர் இன்று அவுலியாக்களி லொருவராக மதிக்கப்படுகிறார். ஆண், பெண் இரு பாலாரிலும் ஆலிம்கள் பலரிருந்து மார்க்கப் பணிபுரிகின்றனர்.

 

பொல்லடி என்னும் காலாட்சேபக் கலை இவ்வூர் மக்களின் பரம்பரைச் சொத்தாகும். இக்கலை தெரிந்த அண்ணாவிமார் பலர் இன்றும் இருக்கின்றனர். சிறந்த அறிஞர்கள், புலவர்கள். கவிஞர்கள். எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள், பேச்சாளர்கள் பலரை எம்மூரிற் சந்திக்கலாம். அன்னாரின் எழுத்தோவியங்கள் காலந்தோறும் பத்திரிகை வாயிலாகவும், நூலுருவிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஞானரை வென்றான். ஜோதிமதம், பதுறுப்பாடல் உரை, நபிமொழி நாற்பது. இஸ்லாமிய இலக்கிய சொற்பொழிவுகள். புதுகுஷ்ஷாம் உரை. பதுறு வீரர்கள் வரலாறு முதலான நூல்கள் இவ்வூரின் ஆக்கங்களாகும். மருதமுனை பாடல் பெற்ற கிராமம் ஆகும்.

 

காலந்தோறும் சமயப் பெரியார்கள் பலர் இவ்வூரில் வதிந்து, நல்லுபதேசங்கள் கூறி நேர் வழிப்படுத்த வந்துள்ளனராதலால் இவ்வூர் மக்கள் மிகுதியும் சாதுக்களாகவும், மற்றையோருடன் அன்னியோன்யமாகப் பழகும் சுபாவமுள்ளவர் களாகவும் அமைகின்றனர்.

 

தமிழ் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பலர் உயர்தரக் கல்விபெற்று அரசாங்கத்தின் பல உன்னத ஸ்தானங்களை வகித்து வருகின்றனர். பல துறைகளிலும் பணியாற்றும் அரசாங்க சேவகர்கள் பலர் இங்குள்ளனர். கல்வியறிவும், தொழில்வசதியும் கிடைக்கத் தொடங்கியதனால் நடையுடை பாவனைகளில் இளைஞர்களிடையே புது மலர்ச்சி காணப்படுகிறது.

 

மழைக்காவியம் பாடிய மருதமுனை சின்னாலிமப்பா

 

சுற்றிலும் தமிழ் மக்களின் இருப்பிடங்களைக் கொண்டுள்ள எம் கிராமத்தவர் தமிழ் மக்களோடு மிகுதியும்நெருங்கிப் பழகுகின்றனர். அடுத்துள்ள இரு தமிழ்க் கிராமங்களைச்சேர உள்ளூராட்சி மன்றமொன்றின் கீழ் இவ்வூர் நிர்வகிக்கப்படு கின்றது. அதன் தலைவரும் இவ்வூர் மகனாவார். அவர் கொழும்பிற் குடிபதியாய் இருந்து கொண்டு இம்மன்றத்தை நடாத்தி வருகிறார்.

கிராமத்தின் மேற்குப் புறத்து வயல் நிலம் வெள்ளத்தால் நிரம்பியுள்ள மாரிகாலத்தில் அந்தப் புறமாக நீண்டு மருத மரங்கள் நின்ற முனையை அடுத்தே முதற்குடியேற்றம் ஏற்பட்டது. அதனாலேயே இவ்வூர் மருதமுனை என்றழைக்கப்பட்டது.

 

மட்டக்களப்புக் கல்முனைப் பெருந்தெருவில் இவ்வூர் அமைந்திருந்தலால் போக்கு வரவு வசதியும் கல்முனைப் பட்டினத்தை அடுத்திருப்பதால் தபால், தந்தி, வைத்திய வசதிகள் யாவும் தாராளமாக உண்டு, காலையிலொன்றும், மாலையிலொன்றுமாக வேண்டிய எல்லாப் பொருட்களையுமே இலகுவாகப் பெற்றுக்கொள்ள வசதியளிக்கின்றன.

 

நவீன மோஸ்தரிலமைந்த கட்டிடங்கள். வாஸஸ்தலங்கள் ஊருக்கு அணி செய்கின்றன. நீண்ட காலப் பிரயாசத்தின் பயனாக இப்பொழுது தான் மின்சார வசதி கிடைத்துள்ளது.

 

சனப்பெருக்கம் காரணமாகக் கிராமம் வடக்கிலும் தெற்கிலும் வளர்ந்து கொண்டு செல்கிறது. கிராம அபிவிருத்தி மன்றங்கள், கல்வி பணி மன்றங்கள், இளைஞர் இயக்கங்கள் பல உண்டு. அன்னாரின் சேவை பாராட்டுக்குரியது.

 

நாளாந்தம் பல துறைகளிலும் எமது கிராமம் முன்னேறிக் கொண்டு வருவதைக் காண்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

 

அல்-மருதமுனை (ஒக்டோபர் -டிசம்பர் 2015)

இதனை சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *